• Fri. Mar 29th, 2024

சென்னை தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு கொரோனா..!

Byவிஷா

Dec 21, 2021

சென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் தொடங்கி தொடர்ச்சியாகக் குறைந்து வருவதன் காரணமாக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமிக்ரான் அச்சம் காரணமாக மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் நேற்று 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நேற்று 1,01,237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 605 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,40,411 ஆக உள்ளது.

நேற்று கொரோனாவில் இருந்து 697 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,96,553 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் நேற்று உயிரிழந்தனர். அதன்படி கோவையில் 2 பேர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் உயிரிழந்துள்ளனர்.


இதுவரை 36,686 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக உயிரிழப்பு ஏதும் இல்லை. மேலும் அதிகபட்சமாக சென்னையில் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையின் கீழ்ப்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருமல், சளி என லேசான கொரோனா அறிகுறிகள் மட்டுமே உள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *