

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 75-க்கும் அதிகமானோர் உயிரிழந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நாட்டின் தொழில் தலைநகரமான மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவதும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள பாந்திரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மார்ச் 25ஆம் தேதி மும்பையில் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம் ஒன்றில ஏற்படுத்த தீ விபத்தில் 11 நோயாளிகள் உயிரிழந்திருந்தனர் மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால் ஷாப்பிங் மால் ஒன்றில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில் ஏப்ரல் 21ஆம் தேதி நாசிக்கில் டாக்டர் சாகிர் உசேன் மருத்துவமனையில ஏற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
அதற்கு அடுத்த இரண்டே தினம் அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி விஜய் வல்லம் என்ற மருத்துவமனையில் ஐசியு பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 கொரொனா பாதிக்கப்பட்ட நபர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர் இந்த மருத்துவமனை மும்பையில் இருந்து வெறும் 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே மாதம் 28ம் தேதி மும்பரா என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். அதன் பிறகு சில மாதங்கள் தீ விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி அகமதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.
ஒவ்வொரு முறை தீ விபத்து ஏற்படும் பொழுதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது சில அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்படுவதும் சம்பிரதாயமாக நடைபெற்று வந்தாலும் தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது மகாராஷ்டிராவில் தொடர் கதையாகவே இருந்து வருவது வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.