

கன்னியாகுமரியில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கன்னியாகுமரி பெரியநாயகி தெரு பகுதியில் கடலின் சீற்றம் மற்றும் மீன் பிடிக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்லும் போது பல்வேறு சவால்கள் எதிர்கொண்டனர். இந்தப் பிரச்சனையை தொடர்ந்து, மீனவர்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுத்தனர்.
இதை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசு அந்த பகுதியில் தூண்டில் வளைவு பாலத்தை மேலும் நீட்டிக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கி, ரூ.26 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியுடன் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி நேற்று (மே 12) முதல் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் உபால்ட் அர்ச்சித்து துவக்கி வைத்தார். நிகழ்வில் மீன்வளத்துறை பொறியாளர்கள் பிரேமலதா, விவேக் ஆனந்த், ஊர் நிர்வாக தலைவர் டாலன் டிஓட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், கடலில் 235 மீட்டர் நீளத்தில் தூண்டில் வளைவு பாலம் நீட்டிக்கப்படும். இதற்காக தற்போது 8 டன் எடையுள்ள பெரிய கான்கிரீட் கட்டைகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், மீனவர்கள் பயன்பெற வலை பின்னும் கூடம் ஒன்று கூட இப்பகுதியில் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. தூண்டில் வளைவு நீட்டிப்பு மூலம் மீனவர்களின் பாதுகாப்பும், தொழில் வசதிகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



