குஜாராத்தில் 125 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று ராஜஸ்தான் முதல் மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பொதுமக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருப்பதால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும். மோர்பி பாலம் விபத்து சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை. தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. ராகுல் காந்தி, பாத யாத்திரைக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இதுவரை இங்கு வரவில்லை, ஆனால் அவர் எழுப்பும் பிரச்சினைகள் இங்குள்ள ஒவ்வொரு வீட்டாருக்கும் தெரியும். இமாச்சல பிரதேச தேர்தலில் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி திடீரென வாபஸ் பெற்றது குறித்து கெஜ்ரிவாலைக் கேட்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் யாருக்குத் தெரியும்? அவர்கள் பாஜகவுடன் கூட்டுச் சேர்கிறார்களா? அவர்களின் நம்பகத்தன்மை குறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்