• Fri. Apr 26th, 2024

கார்கேவுடன் தமிழக காங்கிரஸ்
மூத்த தலைவர்கள் சந்திப்பு:
கே.எஸ்.அழகிரி மீது புகார்

டெல்லியில் கார்கேவை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து, கே.எஸ்.அழகிரி மீது புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து பேசி உள்ளனர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரசில் தற்போது கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. கடந்த 15-ந் தேதி நடைபெற்ற கட்சி வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் நியமனம் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீது புகார் கூறப்பட்டது. அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் இரு அணியாக சென்று இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இது காங்கிரசில் மட்டுமல்லாது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திடீரென சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டனர். அவர்கள் கே.எஸ்.அழகிரி மீது புகார் கொடுக்க சென்றதாக கூறப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு கார்கேவின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழக காங்கிரசில் தற்போது நிலவும் கோஷ்டி பூசல் பற்றியும், இதற்கெல்லாம் நெல்லை மாவட்ட தலைவரை நியமித்ததில் கே.எஸ்.அழகிரி பாரபட்சமாக செயல்பட்டதே காரணம் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அவர்கள் பேசியதாக தெரிகிறது. கட்சி தொடர்பான மேலும் சில விஷயங்களையும் அவர்கள் தலைவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ந் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றது முதல் கடந்த 15-ந் தேதி வரை எந்தவிதமான கோஷ்டி பூசலும் இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகவும் சாதுரியமாக செயல்பட்டு வந்தார். இதனை அண்மையில் நடைபெற்ற கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாள் விழாவில், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகவும் பெருமையுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீர் கோஷ்டி பூசல் ஏற்பட்டு, முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *