• Tue. Feb 18th, 2025

நாடாளுமன்றத்தில் எம்.பி இருக்கையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்

Byவிஷா

Dec 6, 2024

டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் எம்.பி ஒருவரின் இருக்கையில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25ம் தேதி தொடங்கியது. டிச.20 வரை 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் அதானி விவகாரம், உ.பி சம்பல் மசூதி சர்ச்சை என பல்வேறு விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி வந்தன. இதற்கு அவை தலைவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரண்டு அவைகளும் முடங்கியுள்ளன.
10வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கியுள்ளன. இன்று மக்களவை காலை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை எழுப்பினர். ஆனால் அதற்கு விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் கீழ் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது குறித்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். அதாவது, “காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ன் அடியிலிருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர் தெலங்கானா மாநிலத்திலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று அறிவித்திருக்கிறார். அபிஷேங் சிங்வி கூறுகையில், “இதுபோன்று பணம் கண்கெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை நான் இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். நேற்று நான் வெறும் ஒற்றை 500 ரூபாய் தாளுடன் மதியம் 12.57 மணிக்கு அவைக்கு வந்திருந்தேன். மூன்று நிமிடங்களில் அவை முடக்கப்பட்டது. பின்னர் 1 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து கேன்டீனில் அமர்ந்திருந்தேன். பின்னர் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.