


பல்லடம் அருகே தனியார் பாரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு மது பாட்டில், கட்டையால் இருதரப்பினரும் தாக்கி கொண்டதில் ஆறு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் கேளிக்கை விடுதி மற்றும் பார் இயங்கி வருகிறது. இங்கு பல்லடம் மாணிக்காபுரம் சாலையை சேர்ந்த வீரக்குமார், சிவக்குமார் மற்றும் பாலாஜி ஆகிய மூன்று பேர் மது அருந்த சென்று உள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம், சங்கர், தினேஷ் ஆகிய மற்றொரு தரப்பினரும் அங்கு மது அருந்தி உள்ளனர். மது போதை தலைக்கேறிய நிலையில் வீரக்குமார் மற்றும் சண்முகம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கை கலப்பாக மாறிய நிலையில் அங்கிருந்த பீர்பாட்டில் மற்றும் கட்டையால் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர்.

இதில் ஆறு பேருக்கு மண்டை உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பாரில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து இரவு ரோந்து பணியில் இருந்த அவிநாசி பாளையம் காவல் ஆய்வாளர் கோவர்தனாம்பிகை சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும் அடிதடியில் படுகாயம் அடைந்த ஆறு பேருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

