இந்தோனேசியா, செஷல்ஸ் ஆகியநாடுகளில் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனே விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் பகுதிகளில் அண்மையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பாக மத்திய வெளியுறத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 3 மீனவர்களுடன் இந்தோனேசிய கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் சொல்லி இந்தோனேசிய வான் மற்றும் கடல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இந்தோனேசியாவின் ஆஷேயில் உள்ள டிட்போலைர்ட் பியருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்விஷயத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் நேரடியாகத் தலையிட்டு கைது செய்யப்பட்டு உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.