கிராமம் கிராமமாக பெட்டி வைத்து மனு வாங்கிய ஸ்டாலின் , இதுவரைக்கும் எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, “வரும் மே 7ம் தேதியுடன் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. 10 ஆண்டில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை ஒராண்டில் நிறைவேற்றுவதாக கூறி நாட்டு மக்களை ஏமாற்றுகிற கட்சி திமுக. விஞ்ஞான ரீதியாக மக்களை ஏமாற்றுகிற தலைவர் ஸ்டாலின். திமுக அரசை காப்பாற்றி வருவது ஊடகமும் பத்திரிக்கையும் தான்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சாதாரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமியை தலைவர் என்ற நிலைக்கு கொண்டு வந்தவர்கள் அதிமுக தொண்டர்கள். ஆனால் திமுகவில் சாதாரண தொண்டர்கள் ஸ்டாலினை பார்க்க முடியாது என கூறிய அவர், கிராமம் கிராமமாக பெட்டி வைத்து மனு வாங்கிய ஸ்டாலின் , இதுவரைக்கும் எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என கேள்வி எழுப்பினார். பெட்டியை நிரப்புவதில் தான் கவனம் செலுத்துகிறார் ஸ்டாலின். மக்கள் மனுக்கள் வழங்கிய பெட்டிகள் மீது கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் 81 லட்சம் முதியவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டதாகவும், கள்ளக்குறிச்சி கலைக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை எனவும் கூறினார். இந்த பகுதி அதிமுகவின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், மக்களை சந்திக்க திராணியற்ற கட்சி திமுக கட்சி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் பலத்தை நாம் காட்ட வேண்டும் என்று பேசினார்.