

தமிழ்நாட்டில் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவாதம் தற்போதே அரசியல் அரங்கில் நடக்க ஆரம்பித்துவிட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயக்குமார், ஊடகங்களை சந்திக்காத நாட்களே இல்லை என்ற அளவுக்கு அரசின் கருத்துக்களை எடுத்துரைத்தவர். எனினும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதுவரை முன்னாள் அமைச்சர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் மாநிலங்களவை உறுப்பினர் ரேஸில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம், மாநிலங்களவை எம்பி பதவி குறித்து உங்கள் பெயரும் அடிபடுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “கட்சி என்ன முடிவு எடுக்கிறதே அதுதான் இறுதி முடிவு. எல்லோரும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் சரி, என்ன பணி கொடுத்தாலும் சரி, அதனை சிறப்பாக செய்வதுதான் எல்லோருடைய முனைப்பும். எனவே இது கட்சி எடுக்கின்ற முடிவு” என்று பதிலளித்தார். இதிலிருந்து தான் மாநிலங்களவை உறுப்பினர் ஆவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என சூசகமாக கூறியுள்ளார்.

