• Tue. Feb 18th, 2025

தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ByP.Kavitha Kumar

Feb 3, 2025

வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் முரளிராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் முரளிராஜா 2013 பேட்ச் முதல் நிலை காவலராக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்ற அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது.

இந்த நிலையில், சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அதுபோன்று சிபிசிஐடி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கிலிருந்து வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கியிருக்கிறோம். எனவே, இந்த வழக்கை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்று, வேங்கைவயல் வழக்கை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது