தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தங்கியிருந்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில் பலரும் தனியார் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் விதமாக, பணிபுரியும் பெண்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தை சமூக நலத் துறையின் கீழ் தமிழக அரசு அறிமுகம் செய்தது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தோழி மகளிர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பணிபுரியும் பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகம், சென்னை தரமணி, ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான், திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் போலுபள்ளி, கோவை மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் தோழி மகளிர் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.
ரூ.70 கோடி செலவில், இந்த விடுதிகளுக்கான கட்டுமான பணிகளை ரூ.70 கோடி செலவில் மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு, விடுதி கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
