• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

டிச.9ல் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Dec 7, 2023

வருகிற டிசம்பர் 9ஆம் தேதியன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
நேற்று முன்தினம் (டிச.5) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் தீவிர புயல் தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவுக்கு அருகே நண்பகல் 12.30 மணியிலிருந்து 2.30 மணி அளவில் கடந்தது. தமிழகத்தில் இன்று, நாளையும் (டிச.7, 8) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிச.9-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.10 முதல் டிச.12 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிச.8 மற்றும் டிச.9-ம் தேதிகளில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். டிச.10-ம் தேதி, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.