• Thu. Apr 25th, 2024

விவசாயிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்..!

Byவிஷா

Feb 19, 2022

வரும் கரீப் பருவத்தில் விவசாயிகளுக்கு வேளாண் காப்பீட்டை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்காப்பீடான பிரதான்மந்திரிபசால்பிமாயோஜனா திட்டம் 7-வது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. மேரே பாலிசி, மேரேஹத் என்ற பிரச்சாரத்தின் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் காப்பீடு குறித்த விழிப்புணர்வு, நிலப்பத்திரங்கள், ஆவணங்கள், இழப்பீட்டை எவ்வாறு காப்பீட்டில் பெறுவது ஆகியவை குறித்து விளக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேளாண் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள அனைத்து மாநிலங்களிலும் வரும் ஜூன் மாதம் தொடங்கும் கரீப் பருவகாலத்தில்இருந்து வீட்டுக்குவீடு பிரச்சாரம் செய்யவும், காப்பீட்டை விவசாயிகள் வீட்டுக்கே வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதான்மந்திரிபசால்பிமாயோஜனா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மழை, வெள்ளம், இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள், புயல் போன்றவை ஏற்படும்போது, பயிர்கள் சேதம் அடையும்போது, காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும். பிரதான்மந்திரிபசால்பிமாயோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 36கோடிக்கும் அதிகமான விவசாயிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். ரூ.ஒரு லட்சத்து 7ஆயிரத்து 59 கோடி பிப்ரவரி 4ம் தேதிவரை காப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பயிர்க் காப்பீடு செயலி மூலம் பயிர்சேதம்ஏற்பட்ட 72 மணிநேரத்துக்குள் விவசாயி தகவலைப் பதிவிட்டால், அருகில் இருக்கும் சிஎஸ்இ மையத்தின் வேளாண் அதிகாரி பார்வையிட்டு, பயிர் சேதங்களை மதிப்பிடுவார். அதன்பின் பயிர்சேதத்தின் அடிப்படையில் தகுதியான விவசாயிக்கு காப்பீடு தொகை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
காரீப், ராபி பருவ காலத்திற்கு உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்து உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு மொத்த பயிர் காப்பீட்டுத் தொகையில், பிரிமியத் தொகை மாறுபடும். காரீப் பருவத்திற்கு காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதமும், ராபி பருவத்திற்கு 1.5 சதவீதம் பிரிமியம் செலுத்த வேண்டும். பணப்பயிர்களான கரும்பு, பருத்தி மற்றும் வருடாந்திர, பல்லாண்டு கால பயிர்களுக்கு காரீப், ராபி ஆகிய இரண்டு பருவ காலத்திலும் 5 சதவீதம் பிரீமியாக செலுத்த வேண்டும்.
சொந்த நிலத்தில் விவசாயம் செய்வோர், குத்தகை நிலத்தில் சாகுபடி செய்வோர், இணை சாகுபடியாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் என அனைத்து தரப்பு விவசாயிகளும் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ள விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையம் ஆகியற்றிற்கு சென்று, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
அப்போது, முன்மொழிவு பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல் அல்லது விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பயிர்க் காப்பீட்டுக்கான https://pmfby.gov.in/ என்கிற இணைய தளத்தில் விவசாயிகளே ஆன் லைனில் பயிர்க் காப்பீட்டுக்கு பதிவு செய்து கொள்ளலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *