• Sat. Feb 15th, 2025

நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் டார்ச்சர்- பிரபல இயக்குநர் மீது வழக்குப்பதிவு

ByIyamadurai

Jan 29, 2025

சமூக வலைதளங்களில் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக நடிகை அளித்த புகாரின் பேரில் பிரபல மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் சனல்குமார் சசிதரன். இவர் ‘செக்ஸி துர்கா’ உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவர் சமூக வலைதளங்களில் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக, மலையாள நடிகை ஒருவர், கொச்சி எலமக்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், தனது பதிவுகளில் தொடர்ந்து தன்னை டேக் செய்து வருவதாகவும் தனது பெயரில் ஆடியோ குறிப்புகளைப் பகிர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சனல்குமார் சசிதரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகலை, தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சனல்குமார், அந்த நடிகையின் பெயரில் வேறு யாரோ தனக்கு எதிராகப் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். சனல்குமார் சசிதரன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இதே நடிகை, கடந்த 2022-ம் ஆண்டும் சனல்குமார் சசிதரன் மீது புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.