எங்கு திரும்பினாலும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம், மின்கட்டணம் ஆகியவற்றை சமாளிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.74ஆயிரத்து 91(750 பவுண்ட்) போனஸாக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரிட்டனில் உள்ள எமரிஸ் டிம்பர் அன்ட் பில்டர்ஸ் மெர்சன்ட் என்ற நிறுவனம் தங்களிடம் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.74 ஆயிரம் போனஸாக அறிவித்துள்ளது. பிரிட்டனில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் தனது சொந்தப்பணத்திலிருந்து இந்த தொகையை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். இதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குநருக்கு 45 ஆயிரம் பவுண்ட் (ரூ.44.46 லட்சம்) செலவாகியுள்ளது என்று லாட்பைபிள் இணையதளம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எமரிஸ் டிம்பர் அன்ட் பில்டர்ஸ் மெர்சன்ட் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ பிரிட்டனில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை, மின்கட்டணம், சமையல் கேஸ் விலை உயர்வு ஆகியவற்றை ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு ஊழியருக்கும் 750 பவுண்ட் போனஸாக வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் அனைத்து செலவுகளையும் சமாளித்து ஊழியர்கள் வாழ்க்கையை நடத்த இது உதவியாக இருக்கும் என நம்புகிறோம். எங்கள் குடும்பத்தைப் போல், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின்நலனிலும் இந்த கடினமான நேரத்தில் அக்கறை செலுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளது.

எமரிஸ் டிம்பர் அன்ட் பில்டர்ஸ் மெர்சன்ட் நிறுவனத்தின் இயக்குநர் 51வயதான ஜேம்ஸ் ஹிப்கின்ஸ் தி சன் நாளேட்டிடம் கூறுகையில் “ ஒவ்வொருவரும் சிரமப்பட்டும் இந்த நேரத்தில் சில நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புனோம். நாங்கள் அறிவித்த போனஸை ஊழியர்கள் எதிர்பார்க்கவில்லை, உற்காசகமடைந்து, மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்” எனத் தெரிவித்தார். கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அளித்த பேட்டியில் “ பிரிட்டனில் அதிகரித்துவரும் விலைவாசி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. பிரிட்டனில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் அனைத்துக்கும் காரணம்”எனத் தெரிவித்திருந்தார்.அதை தொடர்ந்து இச்செயல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.