

நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் காலமானார்
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார். கோடை காலத்தை கழிப்பதற்காக ஸ்காட்லாந்தின் பால்மோரல் பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவர், அங்கிருந்தவாறே சமீபத்தில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரசையும் நியமனம் செய்தார். இந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் அமைதியாக பிரிந்தது. அந்த தகவலை லண்டன் பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது. தகவல் அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கொட்டும் மழையிலும் ஏராளமானோர் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகிறது. அவரது மகனான 73 வயது இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்க உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
