நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த பி.எம்.2 மக்னா யானை 18 நாட்கள் போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி செல்த்தப்பட்டு பிடிபட்ட நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சீகூர் வனப்பகுதியான காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது…
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா,நாடுகாணி,புளியம்பாறை பகுதியில் தொடர்ந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளையும்,கடந்த நவம்பர் 19 ம் தேதி பாப்பாத்தி என்பவரின் வீட்டை இடித்து சேதப்படுத்தியும், பாப்பாத்தி என்ற மூதாட்டியை அடித்துக்கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பி.எம்.2 மக்னா யானை நேற்று பிடிக்கப்பட்டது.
கடந்த 18 நாட்களாக ட்ரோன்,நான்கு கும்கி யானைகள் அடங்கிய குழு மக்னா யானையை கண்காணித்து வந்த நிலையில், வனத்துறையினரிடம் சிக்காமல் வனப்பகுதியில் சுற்றி திரிந்து வந்தது. அந்த யானை கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை வனப்பகுதியில் கும்கி யானைகள்,யானைகளை பிடிப்பதில் நன்கு பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் வனப்பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு விஜய்,சுஜய்,வாசிம், சீனிவாசன் ஆகிய நான்கு கும்கி யானைகள்,வனப்பணியாளர்கள் உதவியுடன் நடக்க வைத்து புளியம்பாறை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு,அங்கிருந்து வனத்துறையினர் லாரியில் ஏற்றி பிடிப்பட்ட மக்னா பி.எம்.2 யானையை கண்காணிப்பதற்காக ரேடியோ காலர் பொருத்தப்பட்டு இன்று அதிகாலை 2.30 மணியளவில் சீகூர் வனப்பகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது.