• Wed. Apr 24th, 2024

அமித் ஷாவுக்கு எதிராக புதுச்சேரியில் கருப்பு கொடி போராட்டம்..

ByA.Tamilselvan

Apr 24, 2022

புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் எம்எல்ஏ, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு அவருக்கு வரவேற்பளித்தனர்.மேலும்
அங்குக் கூடி இருந்த பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.அமித் ஷா விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஆவடி மத்திய ரிசர்வ் படையினர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்று தங்கினார்.
இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு நாள் பயணமாக அமித் ஷா காலை ஹெலிகாப்டரில் புதுவை சென்றார். புதுவையில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்குக் காலை 10.15 மணிக்கு வந்த அமித்ஷாவுக்கு துணை நிலை ஆளுநர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.
அப்போது அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சாரம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்தாத அமித்ஷா திரும்ப போ என்றும், புதுச்சேரியை வஞ்சிக்கும் அமித்ஷாவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கறுப்புக்கொடியை ஏந்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பியனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கறுப்புக்கொடிகளைப் பறிக்க முயன்றனர். அப்போது திடீரென போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த இடம் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *