• Wed. Apr 24th, 2024

ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை பாஜக அழித்துவிட்டது – மெகபூபா

‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.மேலும் இந்தியாவில் முஸ்லிம் மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-யை மத்திய பாஜக அரசு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் சென்றார்.ஆண்டுதோறும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தார்.

இந்த பயணத்தின்போது ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளுக்கு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் பள்ளி என்ற பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்று அவர் உரையாற்றினார். இதில் நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

இதில் பிரதமர் மோடி பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் தற்போது எழுதப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு பல தனியார் முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன. முன்பெல்லாம் மாநிலத்தில் ஏதேனும் திட்டத்தின் கோப்புகள் நகர வேண்டும் என்றால் 2-3 மாதங்கள் பிடிக்கும். தற்போது இது மூன்று வாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாவும் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. தாத்தா, பாட்டிகளை போல் இங்குள்ள இளைஞர்கள் இனி பாதிக்கப்படமாட்டார்கள்” என்றார்.இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய பாஜக அரசை கடுமையாக குற்றம்சாட்டினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் புல்டோசர்களின் தாண்டவத்தால் முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளனர். ஜஹாங்கிர்புரியில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி முஸ்லிம் மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் நாம் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. அதிக நம்பிக்கையுடன் போராட வேண்டும்.

இதற்கு முன்பு ஜம்மு காஷ்மீர் நன்றாகவே இருந்தது. எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நாட்டின் பல பெரிய மாநிலங்களை விட சிறப்பாக இருந்தது. எங்கள் தாத்தா பாட்டி காலத்தில் இருந்து நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது காஷ்மீர் இளைஞர்கள் மீது பிஎஸ்ஏ (PSA) உபா(UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. காஷ்மீரில் உள்ள நிலங்கள் வெளியாட்களுக்கு விற்பனை செய்யப்படுவதையும் பிரதமர் நரேந்திர மோடி தடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி யாருடைய எதிர்காலம் குறித்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. உண்மையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *