• Thu. Apr 25th, 2024

கோவையில் குழந்தைகளுக்கான சைக்கிள் பேரணி..!

Byவிஷா

May 13, 2023

கோவையில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குட்டி ரோடீஸ் என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த எண்ணங்களை வளர்த்தால் சாலை பாதுகாப்பு குறித்த புரிதல் கொண்ட வலுவான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற முனைப்புடன் கோயம்புத்தூர் யுனைட்டர் ரவுண்டேபிள் 186 என்ற அமைப்பு ‘குட்டி ரோடீஸ்’ என்ற சைக்கிள் பேரணியை கடந்த 2019ம் ஆண்டு நடத்தியது. கோயம்புத்தூர் யுனைட்டர் ரவுண்டேபிள் 186 என்ற அமைப்பானது கடந்த 17 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்பானது அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் அமைத்துக் கொடுப்பது, கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், இயற்கை சீற்றங்களின் போது மக்களுக்கு உதவுதல், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், கணுவாய் மற்றும் காரமடை ஆகிய பகுதிகளில் 4 வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. இதற்கு நிதி திரட்டும் நோக்கிலும், குழந்தைகள் மத்தியில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தாண்டு குட்டி ரோடீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை உள்ள சிறுவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கோயம்புத்தூர் யுனைட்டெட் ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் ராகுல், இந்த ஆண்டு வரும் ஜூன் மாதம் 18ம் தேதி குட்டி ரோடீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 11 மணி வரை கொடீசியா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவது தான் அவர்கள் சாலை விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் முதல்படி என்பதால் இந்த நிகழ்ச்சியில் அனைத்து குழந்தைகளும் வயதுக்கு ஏற்ப சைக்கிளிங் செல்வார்கள். 500 மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை சைக்கிளிங் செல்வதற்கான பிரிவுகள் உள்ளன.
இதில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு காலை உணவு, டீ சர்ட், மெடல், சான்றிதழ் மற்றும் சைக்கிளிங் ஹெல்மெட் கொடுக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக ரூ.749 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மோசமான நிலையில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துதல் என்ற இரண்டு நல்ல காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
குட்டி ரோடீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் www.kuttiroadies.com என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *