• Sat. Apr 20th, 2024

பல ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி கரையோரத்தில் நீர்நாய்கள்..,
மகிழ்ச்சியில் முக்கொம்பு மக்கள்..!

Byவிஷா

Mar 1, 2022

ஒரு காலத்தில் காவிரிக் கரையோரத்தில், மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற நன்னீர் விலங்கான நீர் நாய்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. செழுமையாக இருந்த அந்தக் காலகட்டத்தில் நீர் நிலைகளில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டு, உணவுச் சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன இந்த நீர் நாய்கள்.
குழந்தைப் பருங்களில் கண்ட வானிலையும், பருவமும், நம்முடைய சுற்றுச்சூழலும் தற்போது இல்லை. பல மரங்கள் வெட்டப்பட்டு வருவதால், காடுகளின் பரப்பளவும் குறைந்து போனது. உலக வெப்பமயமாதல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தேவையான கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் “அழிவு நிலையில்” இருக்கும் விலங்குகள், எப்போதோ பார்த்த விலங்குகள் மீண்டும் நம்முடைய பார்வைக்கு கிடைத்தால்? மனம் மகிழ்ச்சி அடைவதோடு அதனை இனிமேலாவது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படும்.
காவிரி ஆற்றங்கரையோரம் நீர்நாய்கள் மீண்டும் மக்களின் பார்வையில் பட்டிருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி முக்கொம்பு அருகே, பட்டாம்பூச்சி பூங்காவிற்கு செல்லும் வழியில் 4 ஆண் நீர் நாய்கள், 3 பெண் நீர் நாய்கள் ஏ வடிவில் நீருக்குள் சென்று மீன்களை வேட்டையாட காத்திருந்தன. ஆரம்பத்தில் காகங்கள் என்று நினைத்து அதனை கடக்க முயன்ற பிஷப் ஹெர்பர் கல்லூரி இயற்கை ஆய்வு குழுவினருக்கு ஆச்சரியம் அளித்தன நீர் நாய்கள்.
நீர் நிலைகள் மாசடைதல், சுருங்குதல் மற்றும் மனித செயல்பாடுகளின் தாக்கத்தால் நீர் நாய்கள் எண்ணிக்கை குறைந்தது. சமீப காலங்களில் சுருங்கி வரும் காவிரி நீர்ப்படுகை மற்றும் நீர் வரத்து குறைவு காரணமாக இந்த விலங்குகளை காவிரி ஆற்றங்கரையோரம் காண்பது மிகவும் அரிதான நிகழ்வாக மாறியது. இந்த விலங்கின் தோலுக்காக வேட்டையாடப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நன்னீர் பகுதிகளில் சதுப்பு நிலங்கள், ஈர நிலங்கள், ஆறுகள், குளங்கள் மற்றும் நெல் வயல்களில் நீர் நாய்கள் அதிகமாக காணப்படுகிறன. உலகில் மொத்தமே 13 வகையான நீர் நாய்கள் மட்டுமே உள்ளது. அதில் இந்தியாவில் மூன்று வகையான நீர் நாய்கள் காணப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு பட்டியலில் அழிய வாய்ப்புள்ள விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மூத் கோட்டட் ஓட்டர், யூராசியன் ஓட்டர், மற்றும் ஸ்மால் கால்வ்ட் ஓட்டர் போன்ற வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
இந்தியாவில் மொத்தமாக எத்தனை நீர்நாய்கள் உள்ளன, எங்கே அதிக அளவில் வாழ்கின்றன என்பது தொடர்பாக எந்த விதமான ஆவணங்களும் பதிவு செய்யப்படாத நிலையில், நீர் நாய்களை பாதுகாக்கவும், இந்த விலங்குகள் குறித்து போதுமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *