பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் 5வது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் சி4 பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.
34 நிமிடம் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் கலக்கலாக ஆடிய பவினாபென் பட்டேல் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவினாபென் பட்டேல், சீனாவின் ஜோவ் யிங்குடன் மோதினார். பரபரப்பாக அரங்கேறிய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்க்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.