• Mon. Jan 20th, 2025

காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலையில் சேருகிறார் நாயகன் செங்குட்டுவன். அவர் சேருகிற அன்றே,சென்னை நகரில் ஒரு மர்மக் கொலை.

காவல்துறை ஆய்வாளர் யோக்ஜேபி தலைமையிலான குழுவில் இணைந்து அக்கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடைபெறுகிறது. அது நடக்கும்போதே மேலும் சில கொலைகள்.அவை எப்படி நடக்கின்றன? அவற்றைச் செய்வது யார்? எதற்காகச் செய்கிறார்கள்? என்பதை விவரிப்பதே படம்.

நாயகன் செங்குட்டுவன் அறிமுக நாயகனுக்குரிய அம்சங்களோடு இருக்கிறார். காதல் காட்சிகள் சண்டைக்காட்சிகள் என நிறைய வாய்ப்புகள். அவற்றைச் சிரத்தையாகச் செய்ய முன்றிருக்கிறார்.
நாயகியாக அம்முஅபிராமி நடித்திருக்கிறார். பெரிதாக வேலை இல்லையென்றாலும் வருகிற இடங்களில் எல்லாம் கவனம் ஈர்க்கிறார்.காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் யோக்ஜேபி, உதவி ஆணையராக வரும் தீபக், எம்.எஸ்.பாஸ்கர், அபிஷேக், நாகேந்திர பிரசாத் ஆகியோர் கவனிக்கத்தக்க வகையில் நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.வெங்கடேஷின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு அமைந்திருக்கிறது.சித்தார்த்விபின் இசையில் தாழ்வில்லை.

மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய இன்னொரு படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் மணிபாரதி.கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் உயிர்காக்கும் கருவியில் ஊழல் செய்வோருக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில், அந்த ஊழலால் சாமானிய குடும்பங்கள் எவ்வளவு பாதிப்புக்கு ஆளாகின்றன என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிபாரதி.