

சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு தருகிற மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. தொடக்கத்தில் அக்கண்டுபிடிப்பையே தடுக்க நினைக்கும் மருந்துநிறுவனக் கொள்ளையர்கள் பின்பு அம்மருந்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எண்ணம் பலித்ததா? இல்லையா? என்பதைச் சொல்ல நினைத்திருக்கும் படம் தி லெஜண்ட்.அறிமுக நாயகனாக நடித்திருக்கும் அருள் சரவணன், தொடக்கக் காட்சியிலேயே ஒரு பொம்மைபோல் தெரிகிறார். முகத்தை மட்டும் காட்டும் நெருக்கமான காட்சிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அப்படியே தெரிவது பெரும் பலவீனம். முகத்திலும் எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்தத் தெரியாமல்தடுமாறுகிறார்.

அய்யோ பாவம்.அவர் மனைவியாக கீதிகா திவாரி, அவர்மீது காதல் கொள்பவராக ஊர்வசிரட்டேலா, ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த், இன்னொரு பாடலுக்கு ராய்லட்சுமி ஆகியோரை வைத்து சரவணனின் பலவீனத்தை மறைக்க முயன்றிருக்கிறார்கள். அந்தப்பெண்களும் தாராளமாக நடித்து உதவியிருக்கிறார்கள்.
விஜயகுமார், பிரபு, விவேக், யோகிபாபு, மன்சூர் அலிகான், வம்சி, சுமன்,ரோபோ சங்கர், முனீஸ்காந்த் உட்பட ஏராளமான நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.
இவர்களில் விவேக்குக்கும் யோகிபாபுவுக்கும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் வேலை. துரதிர்ஷ்டவசமாக ஓரிடத்தில்கூட சிரிப்பு வரவில்லை.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகனை ஓரிடத்தில் கூட அழகாகக் காட்டாத ஒளிப்பதிவு.குலுமணாலியின் பனிபடர்ந்த பிரதேசத்தையும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளையும் அழகாகக் காட்டியிருக்கிறது.ஹாரிஸ்ஜெயராஜின் இசையில் பாடல்கள் தாளம்போட வைக்கின்றன. தில்லானா தில்லானா, ஜிமிக்கி கம்மல் போன்ற புகழ்பெற்ற பாடல்களைத் தழுவி பாடல்கள் அமைந்துள்ளன. பின்னணி இசை அளவுக்கதிகமாகவே இருக்கிறது.
இரண்டு திரைப்படங்கள், ஏராளமான விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட ஜேடி ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.
தொடங்கும்போதே முடிவு தெரியக்கூடிய கதை, எதிர்பார்க்கக்கூடிய காட்சிகள் ஆகியன படமெங்கும் நிறைந்திருக்கின்றன.பிரபல தொழிலதிபராக இருக்கும் ஒருவர் மக்களிடையே அறிமுகமான ஒருவர்
இவர்களை நம்பி தன்னை ஓப்படைத்திருக்கிறார். இவர்களோ அவருக்கு ஏன் இந்த வேலை? என்று எல்லோரையும் கேட்க வைத்துவிட்டார்கள் என்பது பெரும் சோகம்.உங்கம்மா எங்கம்மா இல்லடா இது சினிமா என்று சொல்வார்கள். பணமிருந்தால் எதையும் செய்துவிடலாம் என்றெண்ணியவர்களுக்கு இது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படமோ கலப்படமோ இல்லை திரைப்படம் என்பதை உணர வைக்கும் படம்.