திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் எனவே மணமக்கள் விரும்பினால் ஆன்லைன் வீடியோ மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த சுதர்ஷினி அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் சாட்சிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி உரிய வகையில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் வீடியோ கால் வழியாக அமெரிக்காவில் இருக்கும் ராகுலை திருமணம் செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை. ராகுல் ஏற்கெனவே மனுதாரருக்கு பவர் வழங்கியுள்ளார். இதனால் திருமண பதிவேட்டில் மனுதாரர் அவர் சார்பிலும், ராகுல் சார்பிலும் கையெழுத்திடலாம். பின்னர் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.