குடியரசு தினவிழா முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் , ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத் தூணில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர் நடைபெற்ற விழாவில் 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 247 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
அதே போல மாவட்டம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன் விருது பெற்றார்.விழுப்பனூர் ஊராட்சி பகுதிகளில் கொரோனா காலத்தில் பல்வேறு தூய்மைபணிகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க கழிநீர் கால்வாய்களை சுத்தபடுத்துதல்,ஊராட்சி பகுதிகளில் மரம் நடுதல் போன்ற பல்வேறு சிறப்பான பணியாற்றியமைக்கான அவருக்கு கலெக்டர் சான்றிதல் மற்றும் பதக்கங்களை வழங்கி அவரை வாழ்த்தினார்.