திருப்பூர் பல்லடம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி. லட்சக்கணக்கான ரொக்கப்பணம் தப்பியது. கொள்ளையர்கள் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணையால் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மேற்கு பல்லடம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதியில் டிஎஸ்பி அலுவலகம் எதிரில் ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கிளைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை ஆக்சிஸ் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சென்ற சிலர் அங்கு உள்ள பணம் வழங்கும் இயந்திரம் அடியோடு பெயர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் டிஎஸ்பி சௌமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் இதுகுறித்து வங்கி மேலாளர்க்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் தன்ராஜ் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் மர்ம நபர்கள் சிலர் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்தெடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இக்கொள்ளை முயற்சியின் போது வங்கியில் அலாரம் ஏதும் அடிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து வங்கி மற்றும் அவ்வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.மேலும் கொள்ளை முயற்சியில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்க பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.