

பாலியல் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது ராமநகர் நீதிமன்றம்.
கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடரி காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது . இந்த வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நித்தியானந்தா தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த பாலியல் தொல்லை வழக்கு ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி. மேலும், இந்த வழக்கின் மறு விசாரணையை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
பாலியல் வழக்கு விசாரணைகள் தீவிரமானதை அடுத்து, எதிர்ப்புகள் அதிகம் கிளம்பியதால், பிடதி ஆசிரமம் தாக்கப்பட்டு நித்யானந்தா தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் இந்தியாவிற்கு உள்ளேயே தலைமறைவாக இருந்து வருகிறார் என்று ஒரு தகவல் இருக்கிறது. அதே நேரம் அவர் வெளிநாட்டில் தனி தீவில் கைலாசா என்கிற தனி நாட்டை அமைத்து வருவதாகவும் , அவரே அது தொடர்பாக அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
