• Sun. Mar 16th, 2025

இலங்கைக்கு பறக்கிறதா இந்திய படைகள்..??? முற்றுப்புள்ளி வைத்த இந்திய தூதரகம்..

Byகாயத்ரி

May 11, 2022

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பிலிருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. அதன்பின் மகிந்தராஜபக்சே உட்பட ஆளுங்கட்சியை சேர்ந்த 35 அரசியல் தலைவர்களின் வீடுகளானது நேற்று தீவைத்து எரிக்கப்பட்டது. இவ்வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பஸ்களுக்கும் தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதற்கிடையில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது. அத்துடன் முன்னாள் பிரதமரான மகிந்தராஜபக்சே தஞ்சமடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா படைகளை அனுப்பலாம் என இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கைக்கு படைகள் எதுவும் அனுப்பப்படாது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் இருப்பதாவது “இலங்கைக்கு இந்தியா தன் படைகளை அனுப்ப உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பரவும் தகவலை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவின் நிலைப்பாடு கிடையாது. இலங்கை நாட்டின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என நேற்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இதுபற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.