தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமானாலும், பின்னர் ஹீரோவாக உருவெடுத்து, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய உதயநிதி மாபெரும் வெற்றிபெற்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள உதயநிதி, மாமன்னன் படத்துடன் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே 20-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து மகிழ் திருமேணி உடன் ஒரு படத்தில் நடித்து வரும் உதயநிதி, மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
சன்பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் போன்ற படங்களையெல்லாம் உதயநிதி தான் வெளியிட்டார். இதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் போட்டுள்ளதாகவும், இதன்காரணமாகவே அவர்கள் தயாரிக்கும் படங்கள் வேறு யாருக்கும் கொடுப்பதில்லை என கூறி உள்ள உதயநிதி, அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தை வருகிற ஜூலை 1-ந் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தார்.இதுதவிர சிவகார்த்திகேயனின் டான், கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள விக்ரம், மாதவனின் ராக்கெட்ரி ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையையும் உதயநிதி தான் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.