படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை என்பதற்காக மேலும் ஒருமாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த 15 நாடகளுக்குள் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் தொடங்கி தொடர்ந்து
4 மாணவ,ணவிகளின் தற்கொலை தொடர்கிறது. தொடரும் தற்கொலைகளால் தமிழத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை மேலரத வீதியை சேர்ந்தவர் சுடர்ராஜ் (வயது 52). இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் செல்வக்குமார் (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கிற்கு பின் மாணவன் செல்வக்குமார் நேரடி வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாமல் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுடர்ராஜ் தனது மனைவி மேகலாவுடன், திருச்செந்தூர் அருகே உள்ள அவரது குல தெய்வ கோவிலுக்குச் சாமி கும்பிடச்சென்றுள்ளார்.
பள்ளி சென்று வீட்டுக்குத்திரும்பி வந்த செல்வகுமார், இரவு 11 மணி ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டிப்பார்த்தும் கதவை திறக்காததால் வீட்டின் உள்ளே பார்த்தபோது, உட்புறமாக தாழிட்டுக்கொண்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர், அதன் அடிப்படையில் பெற்றோர் சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், செல்வகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மாணவன் செல்வகுமார் இறப்பதற்கு முன்பு, “நான் நல்ல முறையில் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற உங்கள் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்; என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என வீட்டுச் சுவரில் எழுதி விட்டு இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.