• Tue. Apr 22nd, 2025

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

Byவிஷா

Apr 10, 2025

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், அக்கட்சியின் செயல்தலைவராகவும் செயல்படுவார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கட்சியின் நிறுனத் தலைவராக டாக்டர் ராமதாஸ் பதவி வகித்து வருகிறார். டாக்டர் ராமதாஸின் மகன், அன்புமணி ராமதாஸ், பாமகவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் ராமதாஸின் பேரன் முகுந்தன், பாமகவின் இளைஞரணித் தலைவராக உள்ளார். பாமகவின் இளைஞரணித் தலைவராக பேரன் முகுந்தனை டாக்டர் ராமதஸ் நியமித்ததை, அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழுவிலேயே கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸ் மிக கடுமையாக எதிர்த்தார். அத்துடன், பாமகவினர் தம்மை சந்தித்து ஆலோசனை நடத்த பனையூரில் தனி அலுவலகமும் திறந்தார் அன்புமணி ராமதாஸ்.
இதனைத் தொடர்ந்து தந்தை டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனால் அப்பாவும் மகனும் சமாதானமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று திடீரென டாக்டர் ராமதாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான தாமே இனி கட்சியின் தலைவராக செயல்படப் போவதாகவும், தற்போதைய தலைவரான அன்புமணி ராமதாஸ் இனி செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்வைத்து தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இதனால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.