தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அதற்கு போதுமான அளவு சார்ஜிங் மையங்கள் இல்லாததால், இந்த வாகனங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதோடு மால்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் சாலையோர துணைமின் நிலையங்கள் நிறுவப்படும் என பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இதையடுத்து ₹1,649 கோடியில், 100 புதிய துணைமின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் 2,000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். ₹166 கோடி மதிப்பீட்டில் மிக உயர் அழுத்த மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.