கண்மாயில் மண் அள்ளுவதை தடுத்த முன்னாள் அமைச்சர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி…..திருவில்லிபுத்தூரில் பரபரப்பு…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில், சட்ட விரோதமாக ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் வாகனங்கள் மூலம் மணல் திருட்டு நடந்து வருவதாகவும், மணல் ஏற்றிச் செல்லும் டிராக்டர் வண்டிகள் திருவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் அதிக வேகத்துடன் சென்று வருவதாகவும் பொது மக்களிடம் இருந்து, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், அதிமுக மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை மற்றும் அதிமுக கட்சியினர் பெரியகுளம் கண்மாய்க்குச் சென்று, சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்றனர்.
அப்போது மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உரிய அனுமதி பெற்றுத்தான் மணல் அள்ளளப்படுகிறது, உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று கூறிய மணல் அள்ளும் தரப்பினர், மணல் ஏற்றிய டிராக்டர்களை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிராக்டர்கள் செல்ல முடியாத வகையில் பாதையை மறித்து அமர்ந்தனர். இதனைப் பார்த்த டிராக்டர் ஓட்டுநர் வண்டியை வேகமாக எடுத்து வந்து, முன்னாள் அமைச்சர் மீது மோதுவதற்காக வந்தார்.
இதனையறிந்த இன்பத்தமிழன் மற்றும் அவருடன் அமர்ந்திருந்தவர்கள் சட்டென்று விலகி விட்டனர். பின்னர் மணல் ஏற்றிய டிராக்டர்கள் அங்கிருந்து சென்று விட்டன. இது குறித்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் கூறும் போது, கண்மாயில் மணல் திருட்டு நடப்பதை தட்டிக்கேட்டால் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். எனவே நீதிமன்றத்தின் மூலம் மணல் திருட்டை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஆதரவாளர்களுடன் கிளம்பிச் சென்றார்.
முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது டிராக்டர் ஏற்ற முயன்ற சம்பவம், திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அதிமுக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.