• Fri. Apr 19th, 2024

சென்னை ஐஐடியில் நான்காண்டு பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ByA.Tamilselvan

May 7, 2023

பிளஸ் 2 முடித்தவர்களும், தற்போது பிளஸ்1 தேர்வு எழுதியிருப்பவர்களும் சென்னை ஐஐடியில் நான்காண்டு பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 10ஆம் தேதி.
சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவை நான்காண்டு பி.எஸ். பட்டப்படிப்பாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்தது.கடந்த 2020-ஆம் ஆண்டு உலகின் முதல் இணையவழி நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியது. கேட் மதிப்பெண், வயது, அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் நீக்கி, தரமான உயா்கல்வியை படிக்க விரும்பும் அனைத்து மாணவா்களும் பயன்பெறும் வகையில் இந்த பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியிருந்தது.அதன்படி பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தோ்ச்சிப் பெற்றவா்கள், பிளஸ் 2 வகுப்பை முடித்தவா்கள், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலைப் படிப்பைத் தொடருவோா், ஏதேனும் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்கள் என அனைவரும் இந்த இணையவழி பட்டப்படிப்பைத் தொடரலாம்.
அதன்படி, அடிப்படை பட்டம்  டிப்ளமோ, இளநிலைப் பட்டப்படிப்பு என்ற மூன்று வெவ்வேறு நிலைகளிலும் மாணவா்கள் வெளியேறலாம். அவ்வாறு வெளியேறும் மாணவா்களுக்கு சென்னை ஐஐடி-யில் இருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த நிலையில் இந்த பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடத்தை, நான்காண்டு பி.எஸ். பட்டப்படிப்பாக சென்னை ஐஐடி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவா்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இந்த பி.எஸ். பாடத்திட்ட வகுப்புகளுக்கு மே 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் சேர விரும்புவோா் இணைய முகவரியில் விண்ணப்பப் பதிவு செய்யலாம் என சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களை அறிய https://study.iitm.ac.in/ds/ அல்லது https://study.iitm.ac.in/ds/admissions.html#AD4 என்ற இணைய முகவரிகளைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *