ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று மீண்டும் கடும் அமளி காரணமாக பாஜக எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றி அப்புறப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இது வாக்குவாதமாக முற்றி அதன்பின் கைகலப்பு, தள்ளு முள்ளாக மாறியது. இதனால், சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் நேற்று முழுவதும் அவையை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியது. இன்றும் 370 சட்டப்பிரிவு தொடர்பாக பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்து மீண்டும் அவாமி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு முற்றி தள்ளுமுள்ளு கை கலப்பானது.
இதனால், சபாநாயகர் உடனடியாக பாதுகாவலரை வரவழைத்து பாஜக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால், பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியில் செல்ல மறுத்ததால் குண்டுக்கட்டாக தூக்கி அவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.