வலிமை படம் ரிலீஸாவதையட்டி அஜித் கட்அவுட்டுக்காக அவரது ரசிகர்கள் பாலை திருடலாம் என தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், “முன்னணி நடிகர்கள் படம் ரிலீஸாகும்போது உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கடிதம் எழுதியிருக்கிறோம். கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் உள்ளிட்டோர் இது குறித்து துளியளவு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. கடந்த காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது பால் முகவர்களின் கடைகள் முன்பு இருந்த பாலை ரசிகர்கள் திருடிய சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன என்பதால், வியாழக்கிழமை நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. அதனால், திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய, அவரது ரசிகர்கள் பால் முகவர்களின் கடைகளில் பாலை திருடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால், இதுபோன்ற நேரங்களில் பால் முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையை மட்டும் நம்பிக்கொண்டு, குறைசொல்வதில் அர்த்தமில்லை. நாளை நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை பால்முகவர்கள் சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை தற்காத்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் என்ற போர்வையில் யாரேனும் பாலை திருட முயற்சி செய்தால், அவர்களை பிடித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்து CSR ரசீதை சங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.