சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்துக்காக சிவனடியார்கள் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற நடராசர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. சைவத் திருத்தலங்களில் இது முதன்மையானதாகும். வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் தினசரி கோயிலுக்கு வந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளை வழிபட்டு செல்வர். எப்பொழுதும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
இந்த நிலையில், சுவாமி நடராஜரை பற்றி விமர்சனம் செய்து ஒரு யூடியூப் சேனலில் செய்தி வந்தது. இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சுவாமி நடராஜர் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல் நிர்வாகியை கைது செய்யக் கோரி சிவனடியார்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (மே.23) சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இதனையொட்டி இன்று அதிகாலை முதலே சிவனடியார்கள் சிதம்பரம் நகரில் குவிந்து வருகின்றனர்.
இன்று மாலை 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில், சிதம்பரத்தில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்பி சக்தி கணேசன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.