அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுப்பத்து கிராமத்தில் பிறந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்று தமிழகத்தின் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர், திருச்செந்தூர் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவர்.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கிய TN 43 G 8969 INNOVA காரை அவரது உதவியாளர் கிருபாகரன் நேற்று காலை 9.30 மணியளவில் திருச்செந்தூரில் உள்ள தனியார் லாட்ஜ்க்கு அவரது ஓட்டுநர் மூலம் எடுத்து வந்துள்ளார்
ஓட்டுநர் அவரை லாட்ஜில் இறக்கிவிட்டு காரை லாட்ஜிற்கு வெளியே நடுரோட்டில் நிறுத்தி இருந்தார். போக்குவரத்துக்கு இடையூராக கார் நின்றதால், போக்குவரத்து காவலர் முத்துக்குமார் என்பவர் ஓட்டுநரிடம் காரை ஓரமாக நிறுத்த சொல்லியுள்ளார். ஓட்டுநரும் அவ்வாறே செய்ய, 10.35 மணிக்கு லாட்ஜில் இருந்து வெளியே வந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் கார் 30-அடி தூரம் தள்ளி நிற்பதை பார்த்தவுடன் ஓட்டுநரிடம் கேட்டார். டிரைவர் போக்குவரத்து காவலர் முத்துக்குமார் தான் தள்ளி நிறுத்த சொன்னார் என கூறியுள்ளார். உடனே ஆத்திரம் கொண்ட கிருபாகரன் காவலர் முத்துக்குமாரிடம் சென்று, எங்க ஆட்சி நடக்கும் போது என்னோட காரை எப்படி நீ ஓரமாய் நிறுத்த சொல்வாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் பளார் என்று அறை ஒன்றையும் கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்வால், மன உளைச்சலுக்கு ஆளான போக்குவரத்து போலீசார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த்துள்ளார். சிறிது நேரத்தில் அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் காவலர் முத்துக்குமாரை சந்தித்து அமைச்சர் பேசுவதாக கூறி செல்போனை கொடுத்துள்ளார். அமைச்சர் காவலரிடம் கிருபாகரனை உன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறேன் என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்டால் அடிபட்ட அவமானம் சரியாகி விடுமா? அந்த இடத்தில் எப்படி வேலை பார்ப்பது பொதுமக்கள் மதிப்பார்களா? என போலீசார் கூற, உன்னிடம் எப்படி பேசவேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சொல்லி செல்போனை துண்டித்துள்ளார்.
சிறிது நேரத்தில் காவலர் முத்துக்குமாருக்கு மேலிடத்தில் இருந்து போன் வந்துள்ளது. வேலை, குடும்பம், குட்டி என்ற பயத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டார். இது போலீசார் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.