

தலாக் நடைமுறையை ரத்து செய்து அதனை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான விவகாரத்து சட்டத்தை நடை முறைப் படுத்த வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் முஸ்லிம் பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசிர் ஹீனா, வழக்கறிஞர் அஷ்வனி குமார் துபே மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு கூறியிருப்பதாவது:
முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை ஒரு மாதத்துக்கு ஒரு முறை வீதம் 3 மாதங்களுக்கு தலாக் எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. இதன்படி எனது கணவர் என்னை விவாகரத்து செய்தார். எனது குடும்பத்தினர் வரதட்சணை கொடுக்க முடியாததே இதற்குக் காரணம். மேலும் எனது கணவரின் குடும்பத்தினர் என்னை அடித்து துன்புறுத்தினர். இதுகுறித்து டெல்லி காவல் ஆணையரிடம் புகார் செய்தேன். எனினும், ஷரியத் சட்டப்படியே எனது கணவர் விவாகரத்து செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.
முஸ்லிம்கள் தங்கள் மனைவியை தலாக் எனக் கூறி விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் தனிநபர் சட்டம், 1937, அனுமதி வழங்கியிருக்கிறது. இது தவறானது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14, 15, 21, 25 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது.
எனவே, தலாக் நடைமுறையை ரத்து செய்வதுடன் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் ஒரே மாதிரியான, நடுநிலையான விவாகரத்து விதிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
