• Fri. Apr 26th, 2024

சேகர் ரெட்டிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பணமதிப்பிழப்பு காலத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கியது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு காண்டிராக்டர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் 147 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், சுமார் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், 34 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாட்களில் எப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து சரியாக சேகர் ரெட்டி உள்ளிட்டோர் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து, சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், மோசடியான வகையில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டத்துக்கு புறம்பாக வருமானம் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகள் கீழ் இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, மத்திய அமலாக்கத்துறையும், இந்த விவகாரம் தொடர்பாக, சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் அமலாக்க துறை சார்பில் பதிவு செய்த இந்த வழக்கை ரத்து செய்யக்கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்தார். தேபோல், ஏற்கனவே, தனக்கு எதிராக சிபிஐ தொடரந்த வழக்கையும் ரத்து செய்யக் கேட்டு, சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக 170 சாட்சிகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *