ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் வேட்பாளர் யஷ்வந்த்சின்காவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம்ஆத்மி கட்சி தகவல்
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது. கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பதாக கூறியது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. திரௌபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.