தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் குருவிக்காரன் சாலையில் கோடை வெயிலைத் தணிக்கும் இடமாக மாறியிருப்பதால், மக்கள் அங்கு அதிகம் கூடுகின்றனர்.
மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் மக்கள் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், குருவிக்காரன் சாலையில் மட்டும் மக்கள் அதிகம் கூடுகின்றனர். ஏனெனில், இங்கு வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில், நுங்கு, இளநீர் தர்ப்பூசணி, கம்மங்கூழ் போன்ற பல பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாலும், விலை மலிவாக இருப்பதாலும் இங்கு மக்கள் அதிகம் கூடுகின்றனர்.
நுங்கில் அதிகமாக இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் இருப்பதால் மேலூர் வாடிப்பட்டி போன்ற பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டுஇங்கு 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் உடம்புக்கு ரொம்பவே குளிர்ச்சியை தரக்கூடிய பழம் தான் தர்பூசணி, இந்த பழங்களை திண்டிவனம் போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வந்து, இங்கு முழு பழமாகவும் விற்பனை செய்தும், தர்பூசணிகளை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதில் நன்னாரி சர்பத்தை மிக்ஸ் செய்து குளிர் பானமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இது போக வெயில் காலத்திற்கு தேவையான நீர்ச்சத்தையும் குளிர்ச்சியும் தரக் கூடிய வகையில் செவ்விளநீர், பச்சை இளநீர் போன்ற இளநீர் வகைகள்30 முதல் 50 அல்லது60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, கம்பங்கூழ், கேப்பக்கூழ் போன்ற கூழ் வகைகள் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெயிலில் இருந்து உடம்பை காத்து, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மதுரை மக்கள் அதிகமாக இங்கு வருவதால் சமீபகாலமாக இந்த இடம் கோடைக்கேற்ற இடமாக மாறிவருகின்றது.