

சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேப்பேரி பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கடந்த 10 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட நிலையில், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 20 வயதான ரோஷினி என்ற மாணவி இன்று காலை வகுப்பறைக்கு வந்த நிலையில், 4ஆவது தளத்தில் இருக்கக்கூடிய அவரது வகுப்பறைக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்ற போது, திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டதால் பேராசிரியர்கள், சக மாணவர்கள் அங்கு ஓடி சென்று பார்த்த போது அந்த மாணவி முகத்தில் பற்கள் உடைந்த நிலையில் முகத்தில் ரத்த காயத்துடன் தலைகீழாக இருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர் அந்த மாணவியை மீட்ட சக மாணவர்கள், பேராசிரியர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.. இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்ற நிலையில், கீழ்பாக்கம் காவல் துறை ஆணையர் மற்றும் வேப்பேரி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த கல்லூரிக்கு சென்று, பெண் உயிரிழந்த இடத்தில் பரிசோதனை செய்தது மட்டுமில்லாமல் நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நான்காவது தளத்தில் இருந்து படிக்கட்டு வழியாக சென்று கொண்டிருந்த ரோஷினி என்ற கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த இடத்தில் யார் படிக்கட்டு வழியாக சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும், 20 வயதுடைய மாணவி திடீரென மர்மமான முறையில் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து போலீசார் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

