

முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்துக்கள், மத ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நீடூரில் நடைபெற்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் திருவாளி வாய்க்கால் கரை மகாமுனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று இரண்டாவது காலையாககசாலை பூஜை நிறைவு பெற்ற நிலையில் மகா பூர்ணகுதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் சுற்று பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று நீடூர் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு மேளதாளங்கள் முழங்க ஆலய நிர்வாகம் மரியாதை செலுத்தினர். இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

