



வானில் பறக்க வேண்டும் என்கிற சாமானிய மக்களின் கனவை நனவாக்கும் வகையில், விமான சேவையில் ஓர் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, சென்னை ஐ.ஐ.டி- உடன் இணைந்து ஸ்டாட் அப் நிறுவனம் இ-பிளைனை அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை ஐ ஐ டி-யின் உதவியோடு முழுக்க முழுக்க மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரானிக் விமானம் சாமனிய மக்களும் தங்களின் கனவை நினைவாக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்று மாசை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, குறிப்பிட்ட இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லக்கூடிய போக்குவரத்தையும் உறுதி செய்யும் வகையில் இந்த எலக்ட்ரானிக் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. 70 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து 150 கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த இ பிளைன், ஒரே நேரத்தில் மூன்று பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டார்களால் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் மற்றும் மின்சாரம் மற்றும் எரிபொருள் மோட்டார்கள் இணைந்து இயங்கும் ஹைபிரிட் விமானம் என இரண்டு வகைகளில் இந்த இ பிளைன்கள் உருவாக்கப்படுகிறது. சிறிய வகை இ பிளைன்கள் கண்காணிப்பு கேமிராக்களின் உதவியோடு வானிலை ஆய்வு செய்வதற்கும், ரயில்வே தண்டவாளங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இது போன்ற இ பிளைன்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களாகவும் செயல்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. குறைந்த வாடகையில் செல்ல விரும்பும் நேரத்திற்குள் செல்வதோடு, வானில் பறக்க வேண்டும் என்ற சாமானிய மக்களின் கனவு நினைவாகும் நாள் இ ப்ளைன் மூலமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

