கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு, இஸ்லாமிய வாலிபர் ஒருவர் ஏலக்காய் தலைப்பாகை மற்றும் ஏலக்காய் மாலை இரண்டையும் தயாரித்துக் கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் வரும் பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலை உடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதற்காக தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் இருக்கின்றனர். ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்பில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஹவேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இது மாதிரியான நிகழ்ச்சிகளில் பிரதமருக்கு மாலை மற்றும் தலைப்பாகை அணிவித்து கௌரவிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஹாவேரியில் பிரதமருக்கு அனுப்பி அணிவிக்கப்பட்ட மாலையும், தலைப்பாகையும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது .
ஹாவேரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் ஏலக்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன . இந்த ஏலக்காய்களை பயன்படுத்தி மாலை மற்றும் தலைப்பாகை தயாரிப்பதில் ஹாவேரி பகுதியில் உள்ள படவேகரா என்கிற முஸ்லிம் குடும்பத்தினர் புகழ் வாய்ந்தவர்களாக உள்ளார்கள்.
பிரதமர் அப்பகுதிக்கு பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று தெரிந்ததும் அவருக்கு அணிவிப்பதற்காக மாலை மற்றும் தலைப்பாகை செய்துதருவதாக கூறியிருந்தனர் படவேகரா குடும்பத்தினர். அதன்படியே அக்குடும்பத்தைச் சேர்ந்த ஹைதர் அலி என்கிற 35 வயது முஸ்லிம் வாலிபர், பிரதமருக்காக சிறப்பு கவனம் செலுத்தி ஏலக்காய் தலைப்பாகை மற்றும் ஏலக்காய் மாலை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். இதை அணிந்து கொண்டு பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பங்கேற்று இருந்தார்.