• Fri. Mar 29th, 2024

உழவர் சந்தைகளில் முழுநேர கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்-முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி

Byதரணி

Sep 22, 2022

திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்திலுள்ள உழவர் சந்தையில் உண்மையான ஏழை எளிய விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை உழவர் சந்தைகளில் நேரடியாக விற்பதற்கு முழுநேர கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து தொடர்ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுகிறார் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி.
தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழகத்தில் முதல் உழவர் சந்தையினை முத்தமிழறிஞர், தலைவர், டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவதன் மூலம் அதிக லாபம் கிடைத்ததால் விவசாயிகள் இடையே உழவர் சந்தை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மகாராஜ நகர், மேலப்பாளையம், டவுன் ,கண்டியப்பேரி மற்றும் அம்பை ஆகிய நான்கு இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் விதி 110 கீழ் தமிழகம் முழுவதும் மேலும் 10 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என அறிவித்தார் அதன்படி நெல்லையில் மேலும் ஒரு உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐந்தாவது உழவர் சந்தை நெல்லை மாவட்டத்தில் பாளை என் ஜி ஓ காலனியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாக்க வைப்பதற்கு ஒரு குளிர் பதன கிடங்கு அமைந்துள்ளது. நெல்லையில் மாநகர் பகுதியில் 3 உழவர் சந்தைகள் அமைந்துள்ளது இதில் மகாராஜா நகர் சந்தையில் மட்டுமே குளிர் பாசன கிடங்கு உள்ளது .தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன . இதன் மூலம் ரெட்டியார்பட்டி, இட்டேரி பருத்திப்பாடு தருவை, முத்தூர் கருங்குளம், முன்னீர் பள்ளம், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் இந்த புதிய உழவர் சந்தையால் என்.ஜி.ஒ காலனியில் ரெட்டியார்பட்டி திருமால் நகர், பொதிகை நகர், பெருமாள் புரம் பகுதி பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கலாம்.
பாளை என் ஜி ஓ காலனி புதிய உழவர் சந்தை பணிகள் ஐந்து மாதங்களில் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி ஐந்து மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது கடந்த எட்டாம் தேதி நெல்லையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தில் முடிவடைந்த வளர்ச்சி பணிகள், புதிய திட்ட பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைத்தார் . அப்போது என் ஜி ஓ காலனி புதிய உழவர் சந்தை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது திறக்கப்படவில்லை ஒரு சில பணிகள் முடியடையவில்லை என்று தெரிய வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய உழவர் சந்தையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பதே விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அதிகப்படியான உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை உழவர் சந்தையில் ஓரமாக உட்கார்ந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் அங்கு விவசாயம் செய்யாமல் இருக்கும் இடைத்தரகர்கள் அந்தந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து 10 (1) அடங்கல்களை தவறுதலாக பெற்று நாங்களும் விவசாயிகள் தான் என்று கூறி வெளி மார்க்கெட்டில் சந்தையில் காய்கறிகள் பழங்கள் அனைத்தையும் வாங்கி உழவர் சந்தையில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் விவசாயிகள் கிடையாது பொதுவாக எடுத்துக் கொண்டால் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வெங்காயம் கிலோ 40 ரூபாய் என்று எடுத்துக் கொண்டால், மொத்தமாக கிடைக்கும் வண்டியில் கிலோ விலை 35 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது .ஆனால் உழவர் சந்தையில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இதுதான் உழவர் சந்தைக்கும் மொத்த வியாபாரி சந்தைக்கும்,சூப்பர் மார்க்கெட்டுக்கும் உள்ள வித்தியாசமாகும்.
தமிழகத்திலுள்ள உழவர்சந்தைகளை இடைத்தரகளின்றியும், விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வண்ணம் செயல்படுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்ட பாளை உழவர் சந்தையை விரைவவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளையும் தமிழ்நாட்டு அளவில் ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து உண்மையான விவசாயிகளை கிராமங்களில் கண்டறிந்து இடைத்தரகர்களை உள்ளே விடாமல் அவர்களை வெளியேற்றி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல்வர் மு க ஸ்டாலின் இதனை நடைமுறைப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று சிறு குறு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *