• Sat. Apr 27th, 2024

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!

ByA.Tamilselvan

Sep 24, 2022

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் எந்தவொரு தனிநபர், எந்த சாதி, மதம் போன்றவற்றைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது. எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பாக எதையும் பேசவோ அல்லது கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது. காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி குடிநீர், முதலுதவி, ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறை, கண்காணிப்பு கேமராக்கள, தீயணைக்கும் கருவிகள் போன்றவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை தொடர வேண்டும். வழியில் நிறுத்தவோ அல்லது போக்குவரத்தின் இடையூறு ஏற்படுத்தவோ கூடாது. சாலையின் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே அணிவகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.
போக்குவரத்து மற்றும் அணிவகுப்பை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறைக்கு உதவ போதுமான தன்னார்வலர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைத்திருக்க வேண்டும். காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே அணிவகுப்பு செல்வதை உறுதிசெய்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.
பெட்டி வகையிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அணிவகுப்பில் ஈடுபடுவோர் மதம், மொழி, கலாசாரம் மற்றும் பிற அமைப்பினரின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்திற்கான செலவை திருப்பிச் செலுத்துவதற்கான உறுதிமொழி மற்றும் இழப்பீடு அல்லது மாற்றுச் செலவுகளை ஏற்கும் உறுதிமொழி அளிக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தேவையான நடவடிக்கை சுதந்திரமாக எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *